மென்பொருள் செய்யும் தொழிலாளி Poem by Muralitharan Mauran

மென்பொருள் செய்யும் தொழிலாளி

மென்பொருள் செய்யும் தொழிலாளி - இவள்
மூளையை விற்கும் தினக்கூலி
மென்பொருள் செய்யும் தொழிலாளி - இவன்
மூளையை விற்கும் தினக்கூலி

ஆறு இலக்கத்தில் கூலிகள் வாங்கிடும்
பேறுகள் பெற்ற பெரும் படிப்பாளி

தொங்குது தோளில் மடிக்கணினி - செவித்
துளையில் வெள்ளை இசைக்கொழுவி
பிந்திவந்த புதுச் செல்பேசி - கையில்
புதுத் தொடுதிரைத் தாள்கணினி

சந்தைக்கு என்றைக்கும் மின்னணுப் பண்டங்கள்
வந்ததும் வாங்கிச் சுமந்திடும் பாவி

வாட்டிடும் வெயில் தெரியாது - சும்மா
குளு குளுக் குளிர்க் காற்றுவரும்
நாட்டின் வறுமை புரியாது - பள
பள பளத்திடும் வேலைத்தலம்

ஆட்குறைப்புப் பற்றி மேலிடம் சொன்னபின்
நாட்களை எண்ணக் குளிரிலும் வேர்க்கும்

கால்களிருப்பது உள்நாட்டில் - அவர்
மூளை வசிப்பது மேல்நாட்டில்
வாழ்வு தினப்படிச் சம்பளத்தில் - முத
லாளி நினைப்படி உள்மனத்தில்

நடப்பு நிலத்தில் நினைப்பு வானத்தில்
கிடக்கு வாழ்க்கை அந்தர மாயத்தில்

தேயிலைத்தோட்டத் தொழிலாளி - அவர்
நீதிக்குப் போரிடச் சங்கம் உண்டு
ஆடைத்தொழிற்றுறை ஊழியரும் - தொழில்
உரிமை கேட்டார் ஒன்றுபட்டு

நாயென மென்பொருட் கூலிகள் கெஞ்சுவர்
HR ஆண்டையின் காலைத்தொட்டு

நீயும் உழைக்கும் உழைப்பாளி - உண்மை
நினைத்துப் பார்த்தே ஒன்றுபடு
ஓய்வையிழந்த உன் உழைப்பைத் திருடி
உறிஞ்சுவதார் சிந்தித்திடு

உன்னையும் என்னையும் சுரண்டும் அமைப்பை
உடைத்து மாற்றிட வந்துவிடு

மென்பொருள் செய்யும் தொழிலாளி - இவர்
உழைக்கும் மக்களின் கூட்டாளி
மென்பொருள் செய்யும் தொழிலாளி - இவர்
மனசு வைத்தால் போராளி

புதிய பூமியை புதிய நீதியை
படைத்திட வா போராடி..

This is a translation of the poem The Software Worker by Muralitharan Mauran
Thursday, October 20, 2016
Topic(s) of this poem: labor
COMMENTS OF THE POEM
Close
Error Success