பாருக்குள்ளே-நல்ல-நாடு கவிக்கோ அப்துல் ரகுமான் Poem by Saravanan Sivasubramanian

பாருக்குள்ளே-நல்ல-நாடு கவிக்கோ அப்துல் ரகுமான்

அவர்களைச் சிறையில் சந்தித்தேன்.
'என்ன குற்றம் செய்தீர்கள்'?
என்று கேட்டேன்.
ஒவ்வொருவராகச் சொன்னார்கள்..
எங்கள் வீட்டில் திருடிக்கொண்டு ஒருவன் ஒடினான்.
'திருடன் திருடன்' என்று கத்தினேன்.
அமைதிக்குப் பங்கம் விளைவித்தாக என்னைக்
கைது செய்து விட்டார்கள்.
'என் வருமானத்தைக் கேட்டார்கள்'
‘நான் வேலையில்லாப் பட்டாதாரி' என்றேன்
வருமானத்தை மறைத்தாக வழக்குப்
போட்டு விட்டார்கள்.
'நான் கரி மூட்டை தூக்கும் கூலி'
கூலியாக கிடைத்த ரூபாய் நோட்டில்
கரி பட்டுக் கறுப்பாகிவிட்டது.
கறுப்பு பணம் வைத்திருந்ததாகக்
கைது செய்து விட்டார்கள்.
'என் வயலுக்கு வரப்பு எடுத்துக் கொண்டிருந்தேன்
பிரிவினைவாதி என்று பிடித்துக் கொண்டு
வந்து விட்டார்கள்'
'அதிகாரி லஞ்சம் வாங்கினார், தடுத்தேன்.
அரசுப் பணியாளரை அவருடைய கடமையைச்
செய்ய விடாமல் தடுத்ததாகத் தண்டித்து விட்டார்கள்.'
'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' படச்
சுவரொட்டியை ஒட்டிக் கொண்டிருந்தேன்.
சட்டமன்ற உறுப்பினர்களை அவதூறு
செய்ததாக அழைத்துக் கொண்டு வந்து விட்டார்கள்'
'வறுமைக் கோட்டை அழிப்போம்' என்று பேசினேன்.
அரசாங்க சொத்தை அழிக்கத் தூண்டியதாக
அடைத்துப் போட்டுவிட்டார்கள்'
'ஊழல் பேர்வழிகளை நாடு கடத்த வேண்டும்'
என்று எழுதினேன், 'கடத்தல்காரன்' என்று
கைது செய்து விட்டார்கள்.
'நான் பத்திரிக்கை ஆசிரியன். தலையங்கத்தில்
உண்மையை எழுதினேன். நாட்டின்
ஸ்திரத் தன்மையைக் குலைத்ததாகக்
கொண்டு வந்து விட்டார்கள்'
'சுதந்திர தின விழாவில் ‘ஜன கண மன' பாடிக்
கொண்டிருந்தார்கள். நான் பசியால் சுருண்டு
படுத்துக்கொண்டிருந்தேன். எழுந்து நிற்க முடியவில்லை.
தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாகச்
சிறையில் அடைத்து விட்டார்கள்'
'அக்கிரமத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்தச்
சொன்னான் கண்ணன்' என்று யாரோ
கதாகாலட்சேபத்தில் சொல்லியிருக்கிறார்கள்
என்பெயர் கண்ணன். 'பயங்கரவாதி' என்று
என்னைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்.
நான் வெளியே வந்தேன்.
சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எதுவும்
இல்லாமல் நாடு
அமைதியாக இருந்தது..
- கவிக்கோ அப்துல் ரகுமான்

பாருக்குள்ளே-நல்ல-நாடு கவிக்கோ அப்துல் ரகுமான்
Friday, June 2, 2017
Topic(s) of this poem: condolence
POET'S NOTES ABOUT THE POEM
கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார். அவர் நினைவை போற்றும் வகையில்
அவர்தம் கவிதைகள் இரண்டை பதிவுசெய்கிறேன்
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success